Tuesday 3 December 2013

01.09.2013

My Tributes to the Voices of Ponniyin Selvan- Sound Book (Bombay Kannan)

இந்தக் குரல்களை மறக்கமுடியாது! ஒரு கும்பமேளா சத்தத்தில் கூட இவர்களின் குரலை வைத்து நான் கண்டுபிடித்துவிட முடியும்!

சாதாரணமாக ஒளிச் சேர்க்கையும் ஒலிச் சேர்க்கையும் சரியான விகிதத்தில் சேர்வதால்தான் காணொளி வசப்படுகிறது. ஆனால் இதில் குரல் கொடுத்துள்ளவர்களுக்கு ஒரு நிபந்தனை! இனிப்பை பற்றி பேசலாம்! ஆனால் சாப்பிடக்கூடாது!

உடல்மொழி கேட்பவர்களாகிய நமக்குத் தெரியாது என்ற நிச்சயத்துடனே அவர்கள் பேசவேண்டும். சிறிது ஏமாந்தாலும் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்குத் தன்னை திருடன் என்று சொல்வது தனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று படிப்பது போல் ஆகிவிடும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற உடனே நமக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நமக்கு உடனே நினைவுக்கு வருவதற்கான காரணம் முதலில் அவர் தோற்றம், உடல்மொழி, பிறகுதான் அவர்  வசனம்(நம் காதில் விழும்).

ஆனால் இங்கு இவர்களின் குரல் மட்டுமே! என்னதான் அவர்கள் professional,amateur கலைஞர்களாக இருந்தாலும் continuity-க்கும், அந்த சீன்க்கு உண்டான moodம் இல்லையென்றால் வேலை தீர்ந்தது.

அவர்களின் குரலில் இருந்த அன்பு, வீரம், கலாச்சார உணர்வு, அதிகாரத் தொணி யாவும் அக்காலத்தில், குறைந்த பட்சம் கல்கியின் காலம் வரை அந்த தொன்மை, இனிமை இருந்தே இருக்கிறது.

எல்லா புகழும் கண்ணனுக்கே!(Bombay)

சுந்தர சோழராக தன் குரலால் வாழ்ந்திருக்கும் SK. ஜெயக்குமார், குந்தவையான கீர்த்தி-யி டம் தன்னுடைய இளமை காலத்து காதலை சொல்லுமிடத்தில் உள்ள வாத்சல்யமும், நெகிழ்ச்சியும், கீர்த்தி (குந்தவை) அதை புரிதலுடன் தந்தைக்குச் சமாதானம்  சொல்லும்போதும், அரசுடைமை தன் சகோதரர்களுக்கு தான் என்று விவாதம் செய்யுமிடமும் மெய் சிலிர்க்க வைக்கும். பெண்களை பெற்றவர்களுக்கும், பெண்களுக்கும் தான் அந்த உணர்வின் மகாணுபாவம் தெரியும்.

என் உறவினர்கள், நண்பர்களுமான நமச்சிவாயம், கிட்டண்ணன்,ஆவுடையப்பன் அண்ணன், ராஜாராம் அண்ணன், ஸ்டீபன் அண்ணன், சிவகுமார், தியாகு, மற்றும் என் மணைவி ஆகியோர் அந்த விஷயத்தில் பாக்கியசாலிகள். எனக்கும்,என் தந்தைக்கும் இந்த ப்ராப்தம் கிடைக்கவில்லை. எனது மகனுக்காவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

குந்தவையாக குரல் கொடுத்த கீர்த்தியும், வானதியாக குரல் கொடுத்த வித்யாவும், அடிக்கள்ளி! என்று செல்லமாக கோபித்துக் கொள்ளும்போதும்,வானதியாக அக்கா!அக்கா! என்று குழையும்போதும் அந்த நேசத்தை என்னால் விவரிக்க முடியாது. ஆனால் அந்த மாதிரியான நேசத்தை பைரவி திரைபடத்தில் சுமித்ரா, லதா ஆகியோர் ஆடிப் பாடும் பாடலான "இதோ! இதோ! என் நெஞ்சிலே, மற்றும் ரம்பா, தேவயாணி பாடும் "மல்லிகையே மல்லிகையே" விலும் ஒரு வகையான ஆச்சரியத்தில் உறைந்து உணர்ந்திருக்கிறேன். கீர்த்தி, வித்யா போன்ற காலத்தை வெல்லும் குரல்கள் இன்றளவும் உள்ளனவா?

நந்தினியாக ஃபாத்திமா பாபு, ஒரு உலோக பெண்குரல், பெரும்பாலும் பொருள் பொதிந்த, அதிகராத் த்வனி கூடிய குரல்-ஒரு மாயம்! நான் கல்லூரியில் படித்தபொழுது இ(அ)ன்றைக்கு அக்கன்னா ( ஃ) பாத்திமா தொலைக்கட்சியில் செய்திகள் வாசித்தாலும், வாசிப்பார் என்று சொல்லி நண்பர்களின் கோபத்திற்கு ஆளாகி அவசர அவசரமாக வீட்டிற்கு வந்து பாத்திமா செய்தி வாசிப்பதை கேட்ட காலம் நினைவிற்கு வருகிறது.

அருண்மொழிவர்மராக அனந்தன், வந்தியத் தேவனாக இளங்கோ, பூங்குழலியாக ஸ்ரீவித்யா, ஆழ்வார்க்கடியானாக ரமேஷ்,அநிருத்தராக கல்யாண்ஜி, பழுவேட்டரையராக வேலுச்சாமியும் நம் மனக்கண் முன்பாக நிற்கிறார்கள்.இவர்கள் முகங்கள் எனக்குத் தெரியாவிட்டாலும் இவர்களுடைய குரல்கள் என் ஜீவியமுட்டும் வாழ்ந்திருக்கும், நானும் தேடிக்கொண்டே இருப்பேன்.

பொருள் தேடும் இந்த காலத்தில் பாம்பே கண்ணன் தன் கனவை மட்டும் மெய்ப்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சர்வ வல்லமை பொருந்திய தமிழ்த் திரையுலகம் பாம்பே கண்ணனை தேடிவரட்டும். வந்தே மாதரத்தை மீண்டும் இலைஞர்கள் மத்தியில் எழுச்சியுடுவதற்கு ஒரு பரத் பாலா,ரஹ்மான் செய்தது போல CK.வெங்கட்ராமன், பாம்பே கண்ணன் பொன்னியின் செல்வன் ஒலிச் சித்திரத்தை மிக நுணுக்கமாய் செதுக்கி இருக்கிறார்கள்.

நான் இங்கே குறிப்பிட்டவர்களில் யாருக்கும் திரு, திருமதி அல்லது செல்வி என்றோ சேர்த்தவில்லை, ஏனென்றால் அவர்கள் எல்லோரும் இந்தியாவின் Intelligent Property-ஆக அறிவிக்கப்படுவதற்கான தகுதியுள்ளவர்கள்.

இந்த ஒலிச் சித்திரத்தை தொடர்ந்து கேட்டதின் மூலம் என் தாய் மொழியறிவில் முன்னேறியுள்ளதாகவும்,என்னுடைய பேச்சு மொழியில் இனிமைக் கூடியுள்ளதாகவும் நினைக்கிறேன்.

No comments:

Post a Comment