Wednesday 4 December 2013

08.06.2013

இன்று ஒரு சரித்திர பதிவிற்கு தகுதியான முன்னோட்டமான முக்கியமான நிகழ்வு என்றே சொல்வேன், மேலும் நான் மிகவும் விழிப்புடன் இருந்து மற்ற உறவினர்களின் உணர்வுக் கலவையை உணர முடிந்தது. என்னுடைய மனைவியின் 7 சகோதிரிகளையும் 4 சகோதரர்களையும், இப் பிறவியில் நேரில் உறவாட, ஊடல் கொள்ள முடியாத, என்னுடைய மாமனார் ஸ்ரீமான். சேது ராமஸ்வாமி முதலியார்-ன் 25-வது நினைவு நாளில் சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் ஒரே இடத்தில் என்னுடைய- நேர் மைத்துனன்-திரு. நமசிவாயம் வீட்டில், பெரிய மைத்துனன் திரு.இராமகிருஷ்ணன், மூதாட்டி மாமியார் செல்லம்மாள் முன்னிலையில் மருமகன்கள் மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகள்( சராசரியாக 20 வயது) -களுடன் ஒரு கலவையான உணர்வுகளுடன் எந்த பேதமும் இல்லாமல் நடந்தது. மந்திர ஓசைகளுடன்,மாமனாரின் ஆசிர்வாதத்தை பெற்றுத் தந்து , தாங்கள் எல்லோரும் ஒரே தந்தையின் பிள்ளைகள்தான் என்பதையும், எதையும் தாங்கும் இதயம் கொண்ட என் மைத்துனன் நமசிவாயம், தன் வாழ்க்கை சதுரங்க ஆட்டத்தின் மூலமாக வெற்றிகரமாக நடத்தினான் என்றே நினைக்கிறேன். ( என் மகனின் காதில் "மலை ஏறினாலும் மச்சினன் தயவு வேண்டும், தாய்க்குப்பின் தாய் மாமன் " என்பதை சொல்லத் தவறவில்லை )

என் பெரிய மைத்துனர் ஸ்ரீ.இராம கிருஷ்ணன் (திருமதி. மங்கைஇராம கிருஷ்ணன் எனது தாய் வழிசகோதரி) வயதில் எனது தந்தைக்குச் சமமானவர், கல்வியில் மட்டும் பொறியாளர் இல்லை, வாழ்வியலிலும் கூடத்தான். அர்ஜுனனுக்கு தேரோட்டியான ஸ்ரீ பரந்தாமனைப் போல் எல்லோருடைய தாபங்களையும் அம்புகளைப் போல் மார்பில் ஏந்தினாலும், மிக நுணுக்கமான தன்னுடைய வசீகரத்தால் ஒருங்கிணைத்தது ஒரு மாயம். அதற்குப் பின்னால் இருக்கும் வலிகளையும், அவமானங்களையும், சமாதானம் செய்து கொண்ட விதம் எனக்கு ஒரு படிப்பினை. தன் இரு குழந்தைகளையும் USA -வில் பொருள் தேடியது போதும், தன்னுடன் இருப்பதே அவர்கள் கடமை என்று சொல்லக் கூடிய வலிமை படைத்தவரின், பிரார்த்தனைகள் "நான் உங்களுக்குப் பதிலாக வந்துவிட்டேன்" என்று என் தெய்வத்திரு மாமனாருக்கு உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன்.

உச்சகட்டமாக இத்தனைபேரும் கோவை, புலியகுளம் Cheshire Homes மன நிலை குன்றிய முதியவர்களுக்கான வாழ்விடத்திற்கு சென்று மதிய உணவு வழங்கி வாழ்வின் நிதர்சனத்தை புரிந்துகொண்டோம். ஒரு கூடுதல் தகவல் Mr. Cheshire ஹிரோஷிமா-வை குண்டு வீசி தாக்கியவர், அதற்கு பிராயச்சித்தமாக அவர் குடும்பத்தினர் உலகின் பல்வேறு நாடுகளில் ஸ்தாபித்து இருக்கும் (ஒரு கிளை நிறுவனம்) Cheshire Homes. மனநலம் குன்றிய ( ? ) திரு. ராஜா, சுமார் 60 வயது முதியவர் அநேகமாக எல்லோரையும் ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டு வரவேற்றது என் மனதை தடுமாற வைத்தது. இரும்பு பெண்மணிகளான என் மனைவியும்,முதல் பெண் நண்பருமான திருமதி. விஜயலக்ஷ்மியும், சகோதரி திருமதி. மதுமதி நமசிவாயம்-ம் சற்றே கலங்கி போனார்கள்.Cheshire Homes-ல் எங்களுக்கு நன்றி சொன்ன போது நாம் அனைவரும் மனநலம் குன்றியவர்களாகவே இருப்பது போல் உணர்ந்தேன்.

திரும்ப வீட்டிற்கு வந்து மதிய உணவு அருந்தி, விடைபெறும்போது என் அன்பின் மருமகள் பொறியாளர் உதயராகினி நமசிவாயம் புகைப்படக் கலைஞராக மாறினாள். அவளின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஒரு பெருமைக்குரிய குடும்பத்துடன் அகலமான புகைப்படம் எடுத்துக்கொண்டு ஒரு திருமண நிகழ்வில் கூடி குளிர்ந்தது போல் உணர்ந்தேன்.

தவமாய் தவமிருந்து,
சுந்தர் (குடும்பத்தார்)

No comments:

Post a Comment