Saturday 29 March 2014

1983-88
----------
Hostel திருவிளையாடல்
----------------------------------
ஸ்டவ் திரி சிறிது மொத்தமாக இருக்கும், அதில் தீ பொறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து தீயை அணைத்தால், கங்கு அணையாமல் இருக்கும், அதன் சாம்பல் விழுவதற்கு நிரம்ப நேரமாகும்.
--------------------------------------------------------------------------------------
வார்டன் ஒதுக்கிய அறை எண் 63-ல் நுழைந்தால் இன்றைய செசென்ஸ் கோர்ட் நீதிபதி  முருகேசன், அண்ணாமலை யுனிவெர்சிட்டி பௌதீக இயல் துறை DR. சலீம், அன்றைய என் அறை நண்பர்கள்.

அறை 63-க்கு இடதுபுறம் இரண்டாவது, மூன்றாவது தளத்துக்கான படிகள், வரிசையாக திறந்தவெளி ரெஸ்ட்ரூம்கள், பிறகு அறை எண் 1-ன் வலதுபுற சுவர்.மாடிப் படிகளின் கீழ் EB மீட்டர் மற்றும் வரிசையாக மூன்று தளங்களின் மெயின் சுவிட்சுகள்.

நல்ல வேளையாக முதல் தளத்திலேயே அறை கிடைத்ததில் மகிழ்ச்சி! அதை தெரிவிக்கும் போதே, இருவரும் ரொம்ப சந்தோஷப் படாதே! இரவு வேளையில் நம்முடைய சீனியர்கள் மேல் தளங்களுக்குப் போகும் முன் நம் அறைக்  கதவைத் தட்டி திருடன் போலீஸ் விளையாடுவார்கள். ரெஸ்ட்ரூம்க்கு வரும் மற்ற நண்பர்கள் பேஸ்ட், சோப்பு ஓசிக் கேட்பார்கள். எல்லாவற்றையும் விட கதவைத் தட்டி, தட்டி ரொம்ப ரகளை பண்ணுவார்கள் என புலம்ப ஆரம்பித்தனர்.

--------------------------------------------------------------------------------------
லுங்கி உடுத்தும் சூழல் கிடைத்தும் லோக்கல் கார்டியன் பாலு மாமாவின் கண்டிப்பான உத்தரவின் பேரில் வேஷ்டி, வெள்ளை கை வைத்த பனியன் தான் போட வேண்டி இருந்தது.
--------------------------------------------------------------------------------------
இரவு முழுவதும் புதிய சூழல் மற்றும் மேல் தளத்திற்கு இரண்டாம் காட்சி பார்த்துவிட்டுப் போகும் நண்பர்கள் அந்த நேரத்திலும் மகிழ்ச்சியுடன் கதவைத் தட்டி விளையாடிச் சென்றதன் காரணமாக சிறிதும் தூங்க முடியவில்லை. பத்து, பதினைந்து நாள் இப்படியே கழிந்தது. முருகேசன், சலீம் புலம்புவதின் அர்த்தம் முழுவதுமாக புரிந்தது.

அன்று ஞாயிறு காலை எங்களுடைய வெஜ்.மெஸ்ஸில்  பிரட்&குருமாதான் காலை உணவு.
முருகேஷ்! நாம் அப்படியே வெளியே சென்று சாப்பிட்டு விட்டு எனக்கு கொஞ்சம் ஸ்டவ் திரி வாங்க வேண்டும் என்று சொல்ல
என்ன மச்சி? சாப்பிடப் போகலாம், ஆனால் எதற்குத் திரி வாங்க வேண்டும்?!.
நீ முதல்ல கிளம்பு, சாப்பிட்டுக் கொண்டே உனக்கு சொல்கிறேன்.
அப்படியே நடந்து போய் திரி வாங்கிய போது, முருகேஷ் இதுதான் என் ஐடியா, நீ சலீமை மட்டும் கரெக்ட் செய்துவிடு.
--------------------------------------------------------------------------------------
பயந்தால் நிம்மதி போய்விடும். பயப்படுபவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்று வெளியே சொல்வதில்லை.
--------------------------------------------------------------------------------------
சலீம் இவன் சொல்வது  நல்லத் திட்டமாகத் தெரிகிறது, என்ன சொல்கிறாய் என முருகேஷ் கேட்க,அதற்கு சலீம், டேய்!  வேணாண்டா! மாட்டிகொண்டால் பின்னிவிடுவார்கள்.
நான், சலீம் இங்க பாரு, நீ நிம்மதியாக தூங்க வேண்டுமா? இல்லையா? நம்மை யாராவது பார்த்துவிட்டால் கூட ஒன்றுமே நடக்காதது மாதிரி போய்விடுவார்கள்.

சலீம் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டு விட, சலீம் எங்களது அறைக்குள் தாழ் போடாமல் கதவின் பின்னால் ஒரு ஸ்டூல் வைத்து விட்டு நாங்கள் குரல் கொடுத்தவுடன், கதவைத் திறந்து பிறகு தாழிட வேண்டும்.

முருகேஷ் நான் சைகை செய்தவுடன் எல்லா மெயின்  சுவிட்ச்களையும் அணைத்துவிட வேண்டும். திரும்பவும் போட்டுவிட்டு அறைக்குள் என்னோடு நுழைந்து விட வேண்டும்.

சீனியர்கள் இரண்டாம் காட்சி முடிந்து, பேருந்து கிடைக்காமல் நடந்தே வந்து, அயற்சியாக மாடிப் படி ஏற ஆரம்பித்தனர். நான் என்னுடைய கழுத்தில் கம்பளி ஒன்றை சுற்றிக் கொண்டு, வெள்ளை வேட்டி, பனியனுடன், திரியை கங்குடன் வைத்துக் கொண்டு மூச்சைப் பிடித்துகொண்டு ரெஸ்ட்ரூம் தூணிற்குப் பின்னால் நிற்கிறேன்.

சிறிது சிறிதாக நண்பர்கள் மெல்ல மெல்ல மேலே ஏறிவர, அவர்கள் எப்போதும்போல் கதவைத் தட்ட,முருகேஷ் விளக்கை அணைக்க, நான் திரியை ரஜினி சிகரெட் முழுங்குவது போல் வாய்க்குள் கொண்டுபோய், பற்களால் திரியை மெட்டிக் கொண்டு, வாயைத் திறக்காமல் ஒரு ஓலமிட, என்னுடைய பற்களின் இடைவெளியில் தீயின் ஜ்வாலை சிகப்பாக ஒளிர, அவர்கள் என்னைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்று நினைத்துக் கொண்டு ஓட, நான் விரட்ட, அவர்கள் உயிர்மேல் உள்ள ஆசையில் திரும்பிப் பார்க்காமல் ஓடினர்.

நான் கொஞ்சம் விரட்டிவிட்டு முருகேஷ்-ஐ கூப்பிட, அவன் விளக்குகளை திரும்பப் போட்டுவிட்டு, இருவரும் எங்கள் அறைக்குள் நுழைய, சலீம் தாளிட சிரித்துக்கொண்டும், பாராட்டிகொண்டும், அன்று முழுவதும் நாங்கள் உறங்கவே இல்லை.

பயந்து ஓடியதில் அவர்கள் மின் விளக்குகள் அணைந்து திரும்ப எரிந்ததை அவர்கள் உணரவே இல்லை. அவர்கள் முதல் தளத்தில் கொள்ளிவாய் பிசாசு இருப்பதாகவே நம்பினர்.
-----------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கையில் தானே வாழ்க்கையே இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------

அந்த 5 வருடமும் முதல் தளம் எங்கள் மூவரின் கண்ட்ரோல்-லில் தான் இருந்தது.




No comments:

Post a Comment